இலங்கையை உலுக்கிய சோகம் - இரண்டு மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனின் சடலம்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன ஒரு இளைஞனின் சடலம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெப்பெட்டிபொல - கவரம்மன பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அதிகாரசபை ஊழியர்கள் குழுவினால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அடையாளம்
மேலும் உயிரிழந்தவர் மீராவத்த, வெரலவத்த பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். அசித கோசலா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் போது கவரம்மன பகுதியில் இருந்து மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நவம்பர் 27 அன்று அதே இடத்தில் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில் இவர் மண்ணில் புதையுண்டுள்ளார்.
இதன்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக, போக்குவரத்துக்கு ஏற்ற அளவிற்கு மட்டுமே மண் அகற்றப்பட்டதுடன், மேலும் காணாமல்போனவரின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பொலிஸார் விசாரணை
இருப்பினும், தற்போதைய சாதகமான வானிலை காரணமாக, வெலிமடை - நுவரெலியா வீதியில் கெப்பெட்டிபொலவிலிருந்து பலுங்கல வரையிலான வீதியில் விழுந்த மண்ணை அகற்றி வருகின்றனர்.

இதன்போது சம்பந்தப்பட்ட நபரின் சடலம் என சந்தேகிக்கப்படும் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து கெப்பட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.