களுத்துறையில் அடையாளம் தெரியாத ஆண்ணொருவரின் சடலம் மீட்பு - பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸார்
களுத்துறை - தெற்கு கடற்கரைப் பகுதியில் இன்று(31.05.2026) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சடலமாக மீட்கப்பட்டவரின் அடையாள விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி,
தோற்றம்: சுமார் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர். ஆடை: சிவப்பு நிற அரைக்கைச் சட்டை அணிந்துள்ளார்.
தலைமுடி: கறுப்பு மற்றும் வெள்ளை நிறக் கலப்பில் (நரைமுடி) சற்று நீளமாக வளர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
சடலம் மீட்பு
கடற்கரையில் சடலமொன்று கரை ஒதுங்கிக் கிடப்பதைக் கண்ட பிரதேசவாசிகள், களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அவசரத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், உயிரிழந்தவர் குறித்த ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனடியாகக் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.