நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கு, நேற்று (08) நீர்கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிசார் குறித்த அறிவித்தலை சமர்ப்பித்துள்ளனர்.
அதன் பிரகாரம் இந்த மாதம் 2ஆம் தேதி நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மாணிக்க ஹேன பொது மயானத்தில் இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை
இதற்கிடையில்இ இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேக நபர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவர்களை அடையாளம் காண்பதற்காக, மூடிய ஆடைகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறத்தாழ 2200 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு ஆதாரங்களாகக் பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டு அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.