இலங்கையில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவுகை கிடையாது : சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி
புதிய இணைப்பு
இலங்கையில் பறவைக் காய்ச்சல் தொற்று கிடையாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரஜையொருவர் இலங்கை வந்திருந்த நிலையில் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த இந்தியப் பிரஜைக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
வெளிநாட்டு பிரஜை
எனினும் குறித்த நபருக்கு பறவைக் காய்ச்சல் கிடையாது எனவும் அவருக்கு சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக முன்னதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தொற்றுநோய் மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளி இன்புளுவென்சா எனப்படும் சளி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக பரிசோதனைகள்
எனவே அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பி.சி.ஆர் பரிசோதனையின் போது இன்புளுவென்சா தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மேலதிக பரிசோதனைகளில் குறித்த நபர் A/H1N1 எனப்படும் பறவை காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் பதிவாகியுள்ளமை குறித்து சுகாதார அமைச்சு அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
பறவைக் காய்ச்சல் நோய் பொதுவாக பறவைகளுக்கு பரவி வரும் நிலையில் சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் இந்த நோய்த் தொற்று தாக்கம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |