பலஸ்தீன ஆதரவு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிமல் ரத்நாயக்க
துருக்கியில் நடைபெறும் சுதந்திர பலஸ்தீனத்துக்கான ஆதரவு மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கலந்து கொண்டுள்ளார்.
உலகின் 80 நாடுகளின் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்புகளின் தலைவர்கள், நாடாளுமன்ற -உறுப்பினர்கள் உள்ளிட்ட அறுநூறு பேர் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு துருக்கி அதிபர் எர்டோகான் தலைமையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தற்போதைய நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பலஸ்தீனத்துக்கு எதிராக சியோனிச படுகொலைகள் மற்றும் இன அழிப்பை நிறுத்துமாறும், சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறி அண்மைக்காலத்தில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பலஸ்தீனர்களை படுகொலை செய்த இஸ்ரேலுக்கு போர்க்கருவிகள் உள்ளிட்ட உதவிகளை நிறுத்துமாறும், சுதந்திர பலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தும் வகையிலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பலஸ்தீன ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்பவற்றை பிரநிதித்துவப்படுத்தி பிமல் ரத்நாயக்க இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த மாநாட்டில் நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா, பாக்கிஸ்தான், ஆர்ஜெண்டீனா, இந்தியா, மாலைதீவு, ரஷ்யா, ஜேர்மனி, இத்தாலி, வெனிசியூலா, பொலிவியா, சூடான், பங்களாதேஷ், ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பலவும் கலந்து கொண்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |