16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கட்டுப்பாடு! விஷேட மசோதா சமர்ப்பணம்
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் மசோதாவை, ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபைசர் முஸ்தபா நேற்று(24.06.2026) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த மசோதாவின் முதன்மை நோக்கம், குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் ஆகும்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
குறித்த மசோதா, இந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரான மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சருக்கு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரமளிக்கிறது.
மேலும், சிறுவர்கள் நாளொன்றுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய நேரத்தைக் கட்டுப்படுத்த அல்லது அவர்கள் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட நேரங்களைக் குறிப்பிடவும் இது வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், சிங்களப் பதிப்பின் உள்ளடக்கங்களே கவனத்திற் கொள்ளப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.