உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கோரும் ரஷ்யா
ஜி7 உச்சிமாநாட்டுக்குப் பிறகு, உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அணுகுமுறை உண்மையிலேயே மாறியுள்ளதா என்பது குறித்து வொஷிங்டன் தங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது, உக்ரைனில் ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்பதை ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும், இது அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள "உண்மையான மாற்றம்" என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்குப் பிறகு, ரஷ்யாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தமை ஜி7 தலைவர்கள் மத்தியில் அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகும் என்ற மிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கத் தடைகள்
இந்தச் சூழலில் கெய்வ் அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக அமெரிக்கா திட்டமிட்டு கால அவகாசம் வாங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள லாவ்ரோவ், கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் டிரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்பாடுகளை அமெரிக்கா கைவிட்டுள்ளதாக மேக்ரோன் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகள் பின்வாங்கினால், பிற பகுதிகளில் போர்க்கள எல்லைகளை முடக்குவதற்கு புடின் ஒப்புக்கொண்டிருந்த "ஆங்கரேஜ் உடன்பாடுகளை" வொஷிங்டன் இதுவரை செயல்படுத்தவில்லை என்று ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தடைகள் தொடர்வது, பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய தூதரக சொத்துக்கள் திருப்பித் தரப்படாமை மற்றும் உக்ரைனுக்கு தங்குதடையின்றி ஆயுதங்கள் விற்கப்படுவது போன்ற காரணங்களால் இருதரப்பு உறவை வழமைக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவிடம் போதிய அக்கறை இல்லை என்றும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்பின் தூதுவர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் மொஸ்கோ வருகையை எதிர்பார்ப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.