விரைவில் பசில் ராஜபக்ச கைது..!! சற்று முன்னர் சபையில் பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் பதுங்கியிருப்பவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பல குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி தனது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் கைது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என பல குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பலருக்கு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பலர் மீதான வழக்குகள் உள்ளன. சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் தேவையுடையவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தங்களுக்கான வழக்குகளை தொடர முடியும்.
ஆனால், பலர் இங்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பதுங்கிக்கொள்கின்றனர்.
இங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சிவப்பு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் சென்று பதுங்கியிருக்கின்றார். நிச்சயம் அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் இலங்கைக்கு வருவதை தவிர்த்திருந்தார்.
இதனையடுத்து, பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு பின்னர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி, பசில் ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் பகிரங்க சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் பசில் ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.