கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - பயணிகளுக்கு சிக்கல்
கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது கடுமையான பயணிகள் நெரிசலை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் குளிர்காலத்தில் வாராந்தம் மேலதிகமாக 40 விமான சேவைகளை முன்னெடுக்க நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
எனினும் குறைந்த இடவசதி காரணமாக அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்கள்
சில விமான நிறுவனங்கள் மட்டுமே மத்தள விமான நிலையத்தை மாற்று விமான நிலையமாக தேர்ந்தெடுத்துள்ளன.
ஆனால் பல விமான நிறுவனங்கள் வாய்ப்புகள் இல்லாததால் இந்த யோசனையை கைவிட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையம் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கிறது என பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக தாமதமாகி வரும் விமான நிலைய விரிவாக்கம் ஒரு அவசரத் தேவையாகும். சுமார் ஆறு தசாப்தங்களாக விமான நடவடிக்கைகளை எளிதாக்கி வரும் கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது இரண்டு ஓடுபாதைகளை கொண்டிருக்க வேண்டும்.
சுற்றுலாத் துறை
இந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் சவால்களை நிவர்த்தி செய்வது முன்னுரிமை என்று பேராசிரியர் ரணசிங்க வலியுறுத்தினார்.
மேலும் விமான நிலைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைவதில் சுற்றுலாத் துறை நேரடி சவால்களை எதிர்கொள்ளும் என கூறினார்.
2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏற்கனவே 1.7 மில்லியனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



