பரதநாட்டியம் தொடர்பில் மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து : வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக பரதநாட்டியம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மௌலவிக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து பௌத்த சங்கத்தின் தலைவரால் இன்றையதினம் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
பாடசாலையில் ஆசிரியர்கள் நடனமாடியமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட மௌலவி அப்துல் ஹமீட் அவர்கள், பரதநாட்டியம் தொடர்பாகவும் தமிழ் மக்களது கலை மரபு தொடர்பாகவும் அவதூறாக பேசியுள்ளதுடன், ஒரு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆசிரியர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கல்லூரி மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்ததுடன், பல்வேறு தரப்புக்களில் இருந்தும் குறித்த மௌலவிக்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் மெளலவிக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த மௌலவியின் கருத்து சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுடன், இது தொடர்டபில் நடவடிக்கை எடுக்குமாறும் பௌத்த இந்து சங்கத்தின் தலைவர் ம.மயூரதன் அவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டிற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம்! ஒவ்வொரு குடிமகனுக்கும் நட்ட ஈடு(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |