தண்ணீரூற்றில் முறிந்து விழுந்த கூழா மரக்கிளையால் ஏற்பட்ட போக்குவரத்து தடை
முல்லைத்தீவு - தண்ணீரூற்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பெரிய கூழா மரத்தின் கிளை ஒன்று இன்று (10.06.2024) காலை முறிந்து விழுந்துள்ளது.
காற்றின் தாக்கத்தினால் இந்தக் கிளை முறிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
வீதியில் ஒரு பகுதியில் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் அக்கிளை நீண்ட நேரமாக அகற்றப்படாது இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாங்குளத்திற்கான வீதியாக இந்தப் பகுதி அமைகின்றது.தண்ணீரூற்று , முல்லைத்தீவு மற்றும் ஏனைய இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு பணிக்காக செல்வோருக்கு வீதியில் கிடக்கும் இந்த கிளையினால் அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வீதியின் ஓரத்தில் நிற்கும் பயன்தரு மரமாக இந்த கூழா மரம் இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அகற்றப்படாது போக்கு
கிளை முறிந்து விழுந்தது நீண்ட நேரமான போதும் அதனை அகற்றி போக்குவரத்தை இலகுவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட்டிருக்க வில்லை.
இளைஞர்களிடையே இருந்து வந்த சமூக நலன் மீதான அக்கறை குறைந்து செல்வது போல தோன்றுவதாக அப்பகுதி வயோதிபர்கள் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி கருத்துரைத்தனர்.
இந்த வீதியில் காலை வேளையில் இருக்கும் அளவுக்கு மக்கள் நடமாட்டமற்ற தண்டுவான் தண்ணீரூற்று வீதியில் முறிந்து விழும் மரங்கள் எல்லாம் உடனுக்குடன் அகற்றப்படும் சூழல் இருக்கின்றது.
ஆயினும் இந்தக் கிளை முறிந்து விழுந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதற்கு எத்தகைய முயற்சிகளும் எடுக்கப்படாத சூழலை அவதானிக்கும் போது இந்தப்பகுதியில் உள்ள மக்களின் பொறுப்புணர்ச்சி பற்றிய கேள்வி தனக்கு எழுத்தாக தன் அனுபவத்தினை ஒப்பிட்டு ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
வீதிப் போக்குவரத்து தொடர்பில் கண்காணிக்கும் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கெனினும் இந்த விடயத்தினை உடன் தெரியப்படுத்தியிருப்பது போலவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தவிர்க்கப்படும் விபத்துகள்
அதிகாலையில் முறிந்து விழுந்திருக்க வேண்டும் என்றுரைக்கும் சிறு வியாபாரி ஒருவர் வாகனங்களின் சாரதிகள் பொறுமையோடு நிதானமா விலகிச் செல்ல எத்தனிப்பதால் விபத்துக்களை தவிர்க்க முடிகின்றது.
தண்ணீரூற்றில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் வழிந்தடத்தின் வழியே பயணிப்பதற்கு இந்தக் கிளை தடை செய்துள்ளது.
முல்லைத்தீவில் இருந்து தண்ணீரூற்றுக்கு செல்லும் வழித் தடத்தின் வழியே பயணிகள் விலகிப் பயணித்து இந்த தடையை தவிர்த்துச் செல்வதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது போல் அடிக்கடி நிகழ்வதில்லை. எப்பவாவது ஒரு தடவை இப்படி நடப்பதுண்டு.ஆனாலும் பெரிய கிளைகள் முறிந்து விழுவதில்லை எனவும் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார்.இதற்காக இந்த கூழாவை அகற்ற முயற்சிக்கக் கூடாது.கூழா இலந்தை எல்லாம் நீண்ட காலமாக இங்கிருக்கும் மரங்கள்.அவை எங்களில் ஒருவராக மாறிவிட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.
மாஞ்சோலை வீதியின் மரங்கள்
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மாஞ்சோலை வைத்தியசாலை பகுதியில் உள்ள வீதியின் பகுதிகளில் அதிகளவு மரங்கள் வீதியின் ஓரங்களில் நிற்கின்றன.
கூழா மற்றும் இலந்தை என இரு மரங்கள் கனி கொடுக்கும் மரங்களாகவும் நிழல் கொடுப்பதாகவும் இருக்கின்றன.
காஞ்சுரை, வேம்பு போன்ற இன்னும் பல மரங்களும் இவ்வீதியில் நிழல் கொடுக்கும் படி இயற்கையாகவே அமைந்துள்ளன.
இவற்றிடையே விபத்துக்களை எற்படுத்தும் வகையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்களை வீதி அபிவிருத்தி திணைக்களத்தினைச் சேர்ந்த ஊழியர்கள் வெட்டி அகற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
முறிந்து விழும் நிலையில் இல்லாத மரங்களாக ஏனைய மரங்கள் இருக்கும் போதும் திடீரென ஏற்படும் காற்றால் முறிந்து விழும் கிளைகளை அவை கொண்டுள்ளன.
கிளைகள் முறிந்து விழும் போது விரைந்து அவற்றை அகற்றி போக்குவரத்தை இலகுவாக்க முயற்சிக்கும் போது இந்த மரங்களை வெட்டி அகற்றும் எண்ணம் தோன்றப் போவதில்லை என்பதும் நோக்கத்தக்கது.
முகமை வேண்டும்
வீதியோர மரங்கள் பயனுடையவை.பயணிகளின் சௌகரியமான பயணத்திற்கு பெரிதும் உதவக் கூடியன.பல இடங்களில் வீதியோரங்களில் மரங்கள் நட்டு வளர்க்கப்படுவதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
ஆனாலும் வீதியோர மரங்களை முகமை செய்துகொள்ளும் இயல்பு இல்லை என்பதும் அதனால் ஏற்பாடும் அசௌகரியங்களால் பயணிகள் அதிகளவில் பாதிப்படையும் சந்தர்ப்பங்களும் உண்டென்பதும் கருத்திலெடுக்கப்படல் வேண்டும்.
வீதியோரங்களில் உள்ள வீடுகளில் வாழும் மக்களும் வீதியினை பேணும் எல்லா தரப்பினருமாக வீதியோர மரங்கள் தொடர்பிலான முகமை ஒன்றை உருவாக்க வேண்டும்.
இந்த முயற்சி வீதியோர மரங்களால் ஏற்படும் பயனடைதலை அதிகரிக்கும் என வீதியோர மரங்களின் தாக்கங்கள் தொடர்பில் சமூக விடய ஆய்வாளர் வரதன் குறிப்பிடும் ஒரு சந்தர்ப்பத்தில் மேற்படி கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |