பெக்கோ சமனின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் "பெக்கோ சமன்" என்பவரின் மனைவி ஷானிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம, இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 54 (1) இன் கீழ் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க போதுமான ஆதாரங்களை அரச தரப்பு சமர்ப்பிக்காததால், சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுவிப்பு
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது "கெஹெல்பத்தர பத்மே", "கொமாண்டோ சலிந்த", "பாணந்துறை நிலங்க", "பெக்கோ சமன்" மற்றும் பெக்கோ சமனின் மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக்கும்பல் கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.
இந்த பாதாள உலகக்கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஓகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |