பி.பி.சி. அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
இந்தியாவின் புதுடில்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து இங்கிலாந்தில் ஒரு ஆவணப்படத்தை ஒளிபரப்பிய சில வாரங்களுக்குப் பின்னர் புதுடில்லி மற்றும் மும்பையிலுள்ள பி.பி.சி. அலுவலகங்களில் இந்த தேடுதல்கள் நடந்துள்ளன.
இந்த ஆவணப்படம் இங்கிலாந்தில் மட்டுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எனினும், இந்திய அரசாங்கம் இணையங்களில் பகிர்வதைத் தடுக்க முயற்சித்துள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடியின் ஆவணப்படம்
கடந்த மாதம் புதுடில்லியில் இந்த படம் பார்க்கக் கூடியிருந்த மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில், அந்த மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது வகித்த பங்கை இந்த ஆவணப்படம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தொடருந்துக்குத் தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. இந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதாரங்கள் இல்லை
நரேந்திர மோடி நீண்ட காலமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறார், மேலும் கலவரத்திற்கு மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உயர் நீதிமன்றக் குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆவணப்படத்திற்குப் பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை
வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பி.பி.சி. கடந்த மாதம்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.