வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்! நவம்பர் 16ஆம் திகதி தாக்கும் அபாயம் – சிவப்பு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடாவில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவப்பு எச்சரிக்கை
இந்த நிலையில், நவம்பர் 14ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் நவம்பர் 15ஆம் திகதி அதிகாலை 5.30 மணி வரை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை முதல் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.