ஊடக அடையாள அட்டையை காட்டவும்: ஊடகவியலாளர் சசியை அனுமதிக்கமாட்டேன்! பிள்ளையான் பிடிவாதம் (Video)
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி ஊடகவியலாளர் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(31.08.2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தென்னிலங்கையில் இருந்து வரும் பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க, அமைச்சர்கள் யார் வருகைத்தந்தாளும் கேள்வி கேட்கும் ஊடகவியலாளரை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சிவனேதுரை சந்திரகாந்தன் தடுத்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சசி புண்ணியமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஊடகவியலாளர்கள் ஆகியோர் வெளியில் செல்வதினை அவதானித்துள்ளனர்.
ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியுடன் கலந்தாலோசித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அபிவிருத்தி குழு தலைவரிடம் கேள்வி
இதேவேளை, ஊடகவியலாளர்கள் மற்றும் சசி புண்ணியமூர்த்தி ஆகியோர் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரிடம் கேள்வி எழுப்பியபோது ‘‘சசி புண்ணியமூர்த்தி என்பவர் ஒரு ஊடகவியலாளர் இல்லை அதன் காரணமாகவே அவரை நாங்கள் அனுமதிக்கவில்லை'' என சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 2023, 2024 ஆம் ஆண்டுக்காண ஊடக அடையாள அட்டை இருப்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படலாம் என்று மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், 2021, 2022 தகவல் திணைக்கள அடையாள அட்டை உள்ளவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் கூட்டத்துக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட சசி புண்ணியமூர்த்தி மட்டும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.
இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் சசி புண்ணியமூர்த்தி கேள்வி எழுப்பிய போது, கடந்த மாதம் நடந்த கூட்டத் தொடர் ஒன்றில் கிழக்கு மாகாண ஆளுநரை ''மிஸ்டர் கவர்னர்'' என்று கூப்பிட்டதாகவும் இலங்கையின் பிரதம மந்திரியிடம் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பாகவும் 13-வது திருத்தச் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியதன் காரணமாக சசி புண்ணியமூர்த்தி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்ற முடிவை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தகவல் திணைக்கள அடையாள அட்டை தொடர்பில் பார்க்க வேண்டிய பொறுப்பு இலங்கை தகவல் திணைக்களத்துக்குறியது. ஆனால் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைகள அதிகாரி 10 வருடமாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பல ஊடகங்களுக்கும் செய்தி அனுப்பி கொண்டு வருகின்ற செயற்பாடு இந்த ஊடகவியலாளர்கள் அனுமதிக்க படாதவைக்கான காரணமாக இருக்கின்றது என பல முறைப்பாடுகள் அண்மை காலங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆகவே 2021 ஆம் ஆண்டு தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியுமாக இருந்தால் சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி வழங்காததிற்கான காரணம் என்ன என குறித்த ஊடகவியலாளர் வினா எழுப்புகிறார்.
எமது நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருக்கும் ஊடகவியலாளர்களை அடக்க நினைக்கும் இராஜாங்க அமைச்ச சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களத்திற்கும் எதிராக எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,10 வருடத்திற்கு மேலாக ஊடகவியலாளர்களை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சிவனேசதுரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர் ஒருவரை ஊடகவியலாளர் இல்லை என்ற கூறும் கருத்துக்கும் பலர் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




