கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் மீண்டும் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று(19.01.2024) அதிகாலை வேளையிலிருந்து மீண்டும் பலத்த மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளங்களின் நீர்மட்டங்கள்
மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாத நிலமை ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களின் நிலமை தொடர்பிலும் பொறியியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன் படி இன்று(19.01.2024) காலை 7 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 3அங்குலமும், உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 13அடி 9அங்குலமும், வாகனேரிக் குளத்தின் நீரமட்டம் 18அடி 10 அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலமும், கித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 3 அங்குலமும், நவகிரிக்குத்தின் நீர்மட்டம் 29அடி 6அங்குலமும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக குறித்த குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உன்னிச்சைப் பகுதியில் 3.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 17மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 26.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 12 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 24 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம்
அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஆரம்பித்த மழை வீழ்ச்சி அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன் வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது.
காற்றுடன் கூடிய காலநிலை
குறிப்பாக நாவிதன்வெளி ,கல்முனை முஸ்லிம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வயல் நிலங்களில் மழை நீர்
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரை காலை வேளையில் அண்மையில் பனி மூட்டம் காணப்பட்ட போதிலும் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது.
அத்துடன் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாகவும் ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
செய்தி-பாறுக் ஷிஹான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |