புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயம்
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
''2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 2050 பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள்.இவர்களுள் 449 பிள்ளைகள் வெட்டுப் புள்ளிக்குமேல் சித்தியைப் பெற்றிருக்கின்றார்கள்.
2020ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 433 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்று அகில இலங்கை ரீதியில் எமது வலயம் ஐந்தாம் இடத்தில் இருந்தது. தற்போது 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
அதேபோல் சித்தி பெறுதல் என்ற அடிப்படையில் எமது கல்வி வலயம் இலங்கையில் 26ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இது 2020ஆம் ஆண்டு பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் முன்னேற்றகரமாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டு சித்தி பெற்ற மாணவர்களின் அடிப்படையில் 57ஆம் இடத்திலிருந்தோம். தற்போது 26ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
2020, 2021ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் அசாதாரண சூழ்நிலையில் தரம் 4, 5 மாணவர்களின் வகுப்புகள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய வலயங்களையும் விட எமது வலய மாணவர்கள் மிகவும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றார்கள்.
இதற்காகப் பாடுபட்ட எமது கல்வி வலயத்தின் அதிபர்கள், இடர் நிறைந்த காலத்திலும் இவர்களை நேரடியாகவும், தொழில்நுட்பத்தினூடாகவும் கற்பித்த ஆசிரியர்கள், குறிப்பாக எமது கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அவருடன் இணைந்த ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை ஆசிரியர் சங்கம் மட்டக்களப்பு கல்வி வலயம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதை நான் அவதானித்திருக்கின்றேன். எந்தவிதமான புள்ளி விபரங்களுமின்றியே இவ்வாறான குற்றச்சாட்டுகள் அவர்களால் முன்வைக்கப்படுகின்றது.
குறிப்பாகப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் மிகவும் முன்னேற்றகரமான சித்திகள் கிடைக்கப்பெறுகின்றது. இருப்பினும் உயர்தரத்தில் சில பாடத்துறைகளில் சற்றுப் பின்னடைவு இடர் காலத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் விடுபட்ட காலத்தில் ஏற்பட்டது. அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது.
நிச்சயமாக 2021ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் வெளிவர இருக்கின்றது. அது அதிகரிக்கின்ற நிலையையே காண்பிக்கக் கூடியதாக இருக்கும். கோவிட் நிலைமைகளின் பின்னர் தற்போது ஒருவாறான சீரான நிலைமை வந்து கொண்டிருக்கின்றது.
இதன்போது மாணவர்களுக்கு நாங்கள் பயிற்சிப் பரீட்சைகளை நடாத்தி வருகின்றோம். குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சைகள் இன்னும் நடைபெறவில்லை. அவற்றினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் மே மாதம் திட்டமிட்டிருக்கின்றார்கள்.
அந்தப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களுக்காக மூன்று பயிற்சிப் பரீட்சைகளை நாங்கள் ஆயத்தம் செய்திருக்கின்றோம். அவ்வாறே ஒவ்வொரு வகுப்புகளுக்கும் செயலட்டைகள் வழங்கியிருக்கின்றோம்.
அத்துடன் அதிபர்கள் தத்தமது பாடசாலைகளினூடாக அவர்கள் பூர்த்தி செய்திருக்கின்ற பாடவிதானத்தின் அடிப்படையில் பயிற்சி வினாக்களையும் செயலட்டைகளையும் மட்டக்களப்பு கல்வி வலயம் மாத்திரமல்ல மாகாணக் கல்விப் பணிமனையினூடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் குறுங்குறிப்புகளை அச்சடித்து மாகாணம் முழுக்க வழங்கியிருக்கின்றார்கள். அது மாணவர்களுக்கு இத்தகைய இடர் நிறைந்த காலத்தில் துரித மீட்டலைச் செய்ய உதவியாக இருக்கும்.
இத்தகைய இடர் காலத்தில் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதற்குக்
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், வலயக் கல்விப் பணிப்பாளர்களும் மிகவும்
முயற்சியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
