போராட்டத்தின் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்: மயிலத்தமடு பண்ணையாளர்கள் எச்சரிக்கை
எமது பிரச்சினைக்கான தீர்வினை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வழங்காவிட்டால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முடக்கி போராடப்போவதாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடத்துள்ளனர்.
மேலும், அவ்வாறான நிலையேற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமும் அதிகாரிகளுமே பொறுப்பேற்கவேண்டும் என கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை காணி அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.
இந்த நிலையில் 27வது நாளாகவும் கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (11.10.2023)போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பண்ணையாளர்களின் குடும்ப உறவுகள்
பண்ணையாளர்கள் இந்தபோராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது பிள்ளைகளுடன் சில பெற்றோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
இதன்போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாகவும், அவர்களால் மேய்ச்சல் தரைக்குரிய பிரச்சினையை தீர்க்கமுடியாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எந்தவித விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கமுடியாத நிலைமையே ஏற்படும் என்பதை உயர் அதிகாரிகள் உணர்ந்துசெயற்படவேண்டும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரை பிரச்சினை
விவசாய கூட்டங்களில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் கால்நடைகளை மேய்ச்சல் தரை பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதும் கால்நடைகளை அங்கு கொண்டுசெல்லமுடியாத நிலையிலுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள்,
“விவசாய குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்,மற்றும் மகாவலி திணைக்கள அதிகாரிகளை அழைத்து மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவோம் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உறுதிமொழியை வழங்கியபோதிலும் இதுவரையில் எந்த கூட்டமும் நடாத்தப்படவில்லை.
இதேபோன்று மட்டக்களப்புக்கு வந்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கூட்டத்தினை நடாத்தி தீர்வு வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையிலும் இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் தொடக்கம் அதிகாரிகள் வரையில் எங்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.
மேய்ச்சல் தரை பகுதியில் தற்போது விதைப்பு நடவடிக்கைகள் சட்ட விரோத காணி அபகரிப்பாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறு விதைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமானால் எமது கால்நடைகளுக்கான அச்சுறுத்தலாக அது மாறும்.
எனவே தமது மேய்ச்சல் தரைக்கான பிரச்சினைக்கு மூன்று தினங்களுக்குள் தீர்வினை வழங்க வேண்டும். இல்லாதுவிட்டால் மாவட்ட செயலகத்தினை முடக்கி போராடவேண்டிய நிலையேற்படும்.
அத்துடன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.
நாங்கள் இவ்வாறான போராட்டங்கள் நடாத்தும்போது ஏற்படும் அனைத்துவிதமான விளைவுகளுக்கும் அரசாங்கமும் அதிகாரிகளுமே பொறுப்பேற்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
