தெற்கு அதிவேக வீதியின் மண்சரிவில் சிக்கி 4 நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காயம்
புதிய இணைப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நான்கு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பின்னதுவ மற்றும் இமதுவைக்கு இடைப்பட்ட 102 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியின் இருபுறமும் உள்ள மலைகளே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், அந்த மலைப்பகுதிகளில் அதிகம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தெற்கு அதிவேக வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பில் இருந்து பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதுவ சந்திப்பில் இருந்து வெளியேறவும், மாத்தறையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இமதுவ சந்திப்பில் இருந்தும் வெளியேற வேண்டும் என சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
இதேவேளை, கொழும்பு - பதுளை பிரதான வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதோல - ஓப்பநாயக்க வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.