ரோகித் சர்மாவின் இரட்டை சாதனை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா சதம் கடந்ததன் மூலம் உலக சாதனை ஒன்றை தன்வசப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 273 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜேடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.
63 பந்துகளில் சதம்
தொடக்கம் முதலே அதிரடியை துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா, 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் அவர் 63 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித்தின் 31வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் ரிக்கி பொண்டிங்கை பின்தள்ளி தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் இரு இடங்களில் சச்சின் (49 சதம்), விராட் கோலி (47 சதம்) ஆகிய இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதேபோல், உலகக் கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளில் (63 பந்துகள்) அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
உலக சாதனை
இதுவரை கிறிஸ் கெயில் அடித்த 553 சிக்ஸர்களே உலக சாதனையாக இருந்தது. அதை இன்று ரோகித் சர்மா முறையடித்தார்.
84 பந்துகளில் 131 ஓட்டங்களை எடுத்திருந்த ரோகித், ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.