பட்டலந்த தொடர்பில் புது தகவல்கள்! மரணித்த அதிகாரி உயிருடன் - ரணில் கைதாவாரா..
பட்டலந்த வதை முகாமில் நடந்த கொடூரங்களுக்கு கண்கண்ட சாட்சியங்கள் மிக அதிகமாக உள்ளன. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைவரையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
மேலும், அப்போது பணியாற்றிய டக்ளஸ் பிரீஸை கைது செய்யுங்கள். தான் மரணித்து விட்டதாக டக்ளஸ் பீரிஸ் பகிரங்கப்படுத்தியுள்ளார். எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர் இன்னும் உயிரிழக்கவில்லை எனவும் புபுது ஜயகொட குறிப்பிட்டுள்ளார்.
ரணில் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா..
தற்போது பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பட்டலந்த வதை முகாம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுக்கு கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன. மேலும் காலம் தாழ்த்த வேண்டாம். சாட்சி வழங்கியவர்கள் வயது சென்று மரணிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? எனவே பார்த்து கொண்டிருக்க வேண்டாம். தற்போதைய அரசாங்கம் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூற முடியும். எனவே ரணிலை கைது செய்யுங்கள். டக்ளஸ் பிரீஸை கைது செய்யுங்கள். தான் மரணித்து விட்டதாக பகிரங்கப்படுத்தியுள்ளார். எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர் இன்னும் உயிரிழக்கவில்லை.
தாம் வாழும் போது உயிரிழந்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்புவது பாரிய குற்றமாகும். அங்கு இடம்பெற்ற துன்புறுத்தலில் சுனில் தெல்கொட பிரதான நபர். அவரையும் கைது செய்யுங்கள். அங்கு கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுங்கள்.
அங்கு பணியாற்றி ஒய்வுபெற்ற ஒருவர் அண்மையில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். சிலர் பாலியல் ஆசைகளை நிறைவேற்றி விட்டு அந்த இளைஞர்களுக்கு செய்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் கண்களால் கண்ட சாட்சியங்கள் உள்ளன.
அதேபோன்று சுதத் சந்திரசேகரை கைது செய்யுங்கள். ரணிலின் சீடராகவே சுதத் சந்திரசேகர செயற்பட்டார். அந்த பதவியில் இருந்து விலகிச்செல்லும்போது அவர் பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் ரணிலுக்கு கடிதமொன்றை எழுதி இருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்து இந்த அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
