சீன கப்பல் விவகாரம் - பின்னணியில் காய் நகர்த்தும் பசில்
சர்ச்சைகளை ஏற்படுத்தி சீன கப்பல் சம்பந்தமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த கப்பல் சம்பந்தமான விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீனாவின் நல்லெண்ணம் பாதிக்கப்படாத வகையிலான ஒரு செயற்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அணிசார கொள்கைகக்கு அமைய இலங்கை செயற்பட வேண்டும்
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை இருந்தால், அதனை இரண்டு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதில் மேலும் ஒரு தரப்பு தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அணிசார கொள்கைகக்கு அமைய இலங்கை நாடு என்ற வகையில் செயற்பட வேண்டும்.
இந்த பிரச்சினை மேலும் நீடிப்பதற்காக அமெரிக்கா மற்றும் இந்தியாவை தூண்டி விடும் சிலர் நாட்டில் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.
இப்படியான ராஜதந்திர பிரச்சினைகளின் போது அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் செயற்பட்டது போன்று தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி செயற்பட வேண்டும் எனவும் டியூ. குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.