விடுதலைப்புலிகளின் தங்கம் புதைக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட பரல்! சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் தனியார் காணி ஒன்றில் அடையாளம் தெரியாதவர்களால் தோண்டப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று மீண்டும் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர்கள் இருவரே, இந்த பகுதியில் தங்கத்தை முன்கூட்டியே இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.
மேலும், இதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டிற்கே சென்று உதவி கோரிய போதிலும் அதற்கு அவர் இனங்க மறுத்துள்ளார்.
இதேவேளை, தோண்டி எடுப்பதற்காக நீதிமன்றில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ஆம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த பகுதிக்கு கடுமையான பொலிஸ் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் 02.12.21 இன்று நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மாலை 2.00 மணியளவில் தோண்டும் நடவடிக்கைக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள், தடையவியல் பொலிஸார் கிராம அலுவலகர்கள்,படையினர் ஆகியோர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட போது காணி உரிமையாளரிடமும் குறித்த தென்னந்தோட்ட காணியின் காவலாளியிடமும் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.
பின்னர் தோண்டப்பட்ட இரண்டு கிடங்குகளுக்கு அருகில் 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிணறும் ஒன்று காணப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட பகுதி மழைநீரினால் காணப்பட்ட போது அதில் இருந்து நீரினை வெளியேற்றுவதற்காக பொலிஸார் நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்த வேளை நீர் இறைக்கும் இயந்திரம் பழுதடைந்துள்ளதை தொடர்ந்து கையால் வாளிகொண்டு நீரினை எடுக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், மாலை 5.00 மணியானவேளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த தோண்டப்பட்ட பகுதிகள் தொடர்பில் காணி உரிமையாளரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், அருகில் தகர பரல் ஒன்று தடையமாக காணப்பட்டுள்ளது.
இந்த பரல் இதற்கு முன்னர் காணி உரிமையாளர் காணவில்லை என தெரிவித்துள்ளதுடன், தோண்டப்பட்ட கிடங்கிற்கும் தகர பரலுக்கும் இடைப்பட்ட தூரம் அளவீடு செய்யப்பட்டு தடையபொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கம் தோண்டும் நடவடிக்கையினை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி நாளை வரை பிற்போட்டுள்ளதுடன், குறித்த பகுதிக்கான பொலிஸ் பாதுகாப்பினை போடுமாறும் எவரும் நுளையாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் பணித்துள்ளதுடன், நாளை மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு குறித்த நீரினை அப்புறப்படுத்தி தோண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் வேளை உடையார்கட்டு வடக்கினை சேர்ந்த ஒருவரை காணியின் காவலுக்காகவும் தேங்காய் பொறுக்குவதற்காகவும் நியமித்துள்ளார்.
குறித்த பகுதியில் கிணறு ஒன்று கடந்த 2014 ஆம் ஆண்டு 05 மாதம் 31 ஆம் திகதி கட்டப்பட்டுள்ளதாக அதில் திகதியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதிக்கு அருகில் வெறும் பரல் ஒன்று காணப்பட்டுள்ளமை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 51 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
