பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்திடம் பங்களாதேஷ் முன்வைத்த கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பங்களாதேஷ் 4.5 பில்லியன் கடனை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்காசிய அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்து, அவர்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்க இந்த உதவி கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடிதம் ஒன்றின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திடம் பங்களாதேஷத்தின் நிதியமைச்சர் ஏ.எச்.எம் முஸ்தபா கமால், இந்த கோரிக்கையை முன்வைத்ததாக குறித்த ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் பொருளாதார நெருக்கடி
இதற்கமைய, பங்களாதேஷ் கடந்த காலங்களில் ஆடை ஏற்றுமதி தொழிலை சிறப்பாக செய்து வந்ததாகவும், தற்போது நிதி தேவைகளுக்காகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளுக்காகவும் நிதி உதவியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே தமக்கு இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, பங்களாதேஷின் ஜூலை முதல் மே வரையிலான நடப்பு கணக்கு பற்றாக்குறை 17.2 பில்லியன் டொலர் ஆகும். கடந்த ஆண்டில் 2.78 பில்லியன் டொலர் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில், அதன் வர்த்தக பற்றாக்குறை விரிவடைந்து பணம் அனுப்புதல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இறக்குமதி 39 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் ஆனால் ஏற்றுமதி 34 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை 20 நிலவரப்படி 39.67 பில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.
மேலும், கோவிட்-19 தொற்று நோயால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்ததாலும், பயண தடை காரணமாக பலர் வீட்டிற்கு செல்ல முடியாததாலும் வெளிநாட்டு பங்களாதேஷர்களின் பணம் ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக சரிந்து 1.84 பில்லியன் டொலராக இருந்தது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் நிலை
இதேவேளை தெற்காசியாவின் ஏனைய இடங்களில், இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதோடு, அதேவேளை பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய இறக்குமதிகளின் விலையை உயர்த்திய உக்ரைன் போரினால் பிராந்தியத்தின் பொருளாதாரங்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.