பண்டாரவளை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பண்டாரவளை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று (17) காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவர் , பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி பண்டாரவளையில் இருந்து பல்லேவெல செல்லும் இரவு நேர கடைசி பேருந்தில் பயணியொருவர் குடிபோதையில் ஏனைய பயணிகளுக்கு இடையூறு விளைவித்து ரகளை செய்துள்ளார்.
சிகிச்சை
அதனையடுத்து அந்தப் பயணியை குறித்த பேருந்தின் சாரதி கண்டித்துள்ளார். அதன் போது சாரதியை கடுமையாக பேசி அச்சுறுத்தியவாறு பயணியும் இறங்கிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் சாரதி கடமை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் சந்தர்ப்பத்தில் இடைவழியில் அவரை மறித்த குடிகாரப் பயணி தடியொன்றினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக காயமடைந்த சாரதி தற்போதைக்கு பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வேலைநிறுத்தப் போராட்டம்
சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்யுமாறும், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியே பண்டாரவளை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து சபையின் அனைத்துப் பேருந்துகளும் சேவைகளைப் புறக்கணித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
