பண்டாரவன்னியனின் குதிரை மேச்சல் தரை அழிந்துவரும் ஆபத்தில் : அழிவிலிருந்து தடுக்கப்படுமா
முல்லைத்தீவு - முள்ளிவளையில் உள்ள கயட்டைக்காடுகள் அழிந்துவரும் பேராபத்தினை எதிர்கொண்டுள்ளன.
இலங்கையின் வடமாகாணத்தில் அதிகளவில் கயட்டைமரங்களை கொண்ட இந்தக் காடு விவசாய நடவடிக்கைகளாலும் குப்பைகளை கொட்டுமிடமாக இருப்பதாலும் ஆபத்தை எதிர்கொள்கின்றது.
முள்ளியவளையிலிருந்து குமுழமுனை வரை நீண்டுள்ள இந்த காடு நாகஞ்சோலை, கூழாமுறிப்பு B ஒதுக்கப்பட்ட வனத்தின் ஒரு முனையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மதவாளசிங்கன் கிராமத்தாலும் மதவாளசிங்கன் குளத்தாலும் துண்டாடப்பட்டுள்ள இந்த காடு இரு கிளைகளாக அமைந்துள்ளது.
குமுழமுனை கயட்டைக்காடுகள்
குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் குமுழமுனையில் இருந்து 2km தூரத்தில் தண்ணீரூற்று நோக்கிய திசையில் ஒரு கயட்டைக்காடு இருக்கின்றது.
இது குமுழமுனை மக்களால் சுடலையடி (முறிப்பு மக்களின் சுடலை அங்குள்ளது)அல்லது கற்பூரப்புல் வெளி என அழைக்கப்படுகிறது.
இந்தக்காடு கயட்டை மரங்களையும் அதன் கீழே கற்பூரப்புல் என அழைக்கப்படும் புற்களையும் அதிகம் கொண்ட ஒரு புல்வெளியாக தோற்றமளிக்கின்றது.
இடையிடையே சூரை,காரை,நீர்க்கொடி,ஈச்சை போன்ற தாவரங்களையும் சிறு பற்றைகளாக அவதானிக்க முடிந்தது.
இந்த குமுழமுனை கயட்டைக்காடு இறந்தவர்களை அடக்கம் செய்யும் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்ட போதும் மரங்கள் அழிக்கப்படவில்லை என்பதோடு விவசாய முயற்சிகளுக்காக நிலமும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த காட்டைத் தூய்மையாக இயற்கை அமைப்பை மாற்றாது பேணுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.காட்டிடையே கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முள்ளியவளை கயட்டைக்காடுகள்
மாமூலை, முள்ளியவளையை ஆகிய இரு கிராமங்களின் எல்லையிலிருந்து ஆரம்பமாகும் இந்தக் காடு நாகஞ்சோலை மற்றும் கூழாமுறிப்பு B ஆகிய ஒதுக்கப்பட்ட வனங்களின் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
கயட்டை என அழைக்கப்படும் மரங்களையும் அவற்றின் கீழ் கற்பூரப் புற்களையும் கொண்ட புல்வெளியாக தோற்றமளிக்கும் இக்காடுகள் பரந்தளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பண்டாரவன்னியன் காலத்தில் குதிரைகள் ஓய்வெடுக்கவும் அவற்றின் மேச்சல் தரையாகவும் பயன்பட்டதாக முள்ளியவளையை சேர்ந்த மூதாளர்களிடம் கருத்துக்கேட்ட போது கூறியிருந்தனர்.
ஆலயங்களில் பயன்படும் தெற்பையைச் செய்வதற்கு பயன்படும் புல் இங்கு வளர்வதாகவும் அவற்றையே கற்பூரப்புல் என அழைப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தானர்.
கோடையில் எரிந்து போகின்றது
வெய்யில் அதிகம் உள்ள காலமான கோடை காலங்களில் இந்த கயட்டைக்காடுகள் இலையுதிர்க்கின்றன. காடுகளின் கீழ் உள்ள புற்களும் சருகுகளும் தீப்பற்றி எரிந்து போகின்றன.
காடு ஒவ்வொரு கோடைகாலத்திலும் இவ்வாறு எரியூட்டப்பட்டு நிலம் எப்போதும் ஒருசீராகவே காணப்படும்.ஏனைய காடுகளின் கீழ் உள்ளது போல் சருகுகளாலும் உக்கல்களாலும் நிறைந்து காணப்படுவதில்லை.காட்டின் கீழ் உள்ள மண் செந்நிறமுடையதாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
காட்டிடை தோன்றும் தீ பற்றி கேட்டபோது சில வேளை யாரும் தீவைத்து விடுவதுண்டு.ஆனாலும் அதிக தடவை தானாகவே கோடையில் தீப்பற்றிக்கொள்வதாக தாம் நம்புவதாக முள்ளியவளையின் வரலாற்றுத் தேடலை செய்யக்கூடிய வயதான அறிஞர்கள் பலர் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இது தேடலுக்குரியது என பாடசாலை ஆசிரியர்கள் சிலர் தங்கள்
கருத்தினை குறிப்பிட்டிருந்தனர்.
ஐங்கரநேசன் அவர்களின் கருத்து
முன்னாள் வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்தின் இயக்குநருமான ஐங்கரநேசன் அவர்களிடம் கேட்ட போது இலங்கையில் பரவலாக வளரக்கூடிய மரங்களான போதும் வடமாகாணத்தில் முள்ளியவளையில் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வகை மரங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து காடமைப்பை பேணி வருவதால் அவை முற்றாக அழிக்கப்படுதல் பொருத்தமற்றது என்றும் மேலும் குறிப்பிட்டதோடு குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கலாம் என குறிப்பிட்டார்.
அழியும் நிலையில் கயட்டைக்காடுகள்
பெருமளவில் இருந்த இந்த கயட்டைக்காடுகள் முந்திரிகைச் செய்கைக்காக தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது.
தற்போது முள்ளியவளை இராணுவ முகாம் ஒன்றும் இந்த காட்டின் எல்லையில் காட்டினுள் அமைந்திருக்கின்றது. மற்றொரு பகுதியில் முள்ளியவளை பிரதேச சபையினால் கழிவுகளை கொட்டுமிடமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இக்காடுகள் மெல்ல மெல்ல அழிவுக்குள்ளாகின்றன.
2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்கத்தின் போது இறந்த மக்களை அடக்கம் செய்த சுனாமி நினைவாலயம் ஒன்றும் இந்தக்காட்டினுள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காடு தொடர்பாகவும் இதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் பொது மக்களிடையேயும் சரி கல்வியலாளர்களிடமும் சரி போதியளவில் தெளிவில்லை என்பதையறிய முடிகிறது.
முள்ளியவளை மற்றும் முல்லைத்தீவில் பொது நூலகங்களிலும் சரி பாடசாலை நூலகங்களிலும் சரி இந்த கயட்டைக்காடுகள் பற்றிய தகவல்கள் பெறக்கூடிய நூல்கள் இல்லாமையும் கவலையளிப்பதாக பல நூல் வாசிப்பாளர்களோடு பேசும் போது அறிய முடிந்தது.



