தைப்பூச தினத்தை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்
இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதங்களின் ஒன்றான தைப்பூசத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் இணுவையூர் கந்தசாமி ஆலயத்தில் இன்று (25.01.2024) யாழ்.மருதனார் மட சந்தியில் இருந்து யாழ். இணுவையூர் கந்தசாமி தேவஸ்தானம் வரை பால்குடபவனி சென்றடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து இணுவையூர் கந்தசாமி ஆலயத்தில் இணுவையூர் கந்தசாமிக்கு பாலாபிஷேசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த பால்குடபவனியில் நூறுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
புதிர் அறுவடை
இதேவேளை, தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுக்கும் சம்பிரதாய நிகழ்வுகள் இன்று (25) யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - சங்குவேலி வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை அப்பிரதேச விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று சூரியனுக்கு வணக்கம் தெரிவித்து நெல்லினை அறுவடை செய்துள்ளனர்.
இதனையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்துசென்று மாட்டுவண்டியில் ஏற்றி பாரம்பரிய முறைப்படி உடுவில்,மருனார்மடம் ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உள்ள இந்து ஆலயங்களில் தைப்பூச உற்சவத்தினை முன்னிட்டு இன்று (25) விசேட வழிபாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கொத்து குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் பழைய வளாகத்தில் அறுவடை செய்யப்பட்டு புதிர் எடுத்து கருவறையில் வீற்றிருக்கும் அம்மனின் காலடியில் வைத்து விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் நெற்கதிர்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷேட வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகளிலும் தைப்பூச தினத்தை முன்னிட்டு பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
செய்தி - நவோஜ்
தேத்தாதீவு கொம்புச் சந்தி ஆலயம்
மட்டக்களப்பு - தேத்தாதீவு கொம்புச் சந்தி ஆலயத்திலும் தைப்பூசத்தில் இன்றைய தினம்(25) புதிரெடுக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் த.விமலானந்தராசா அவர்களில் தலைமையில் அலய பிரதம குரு சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமைகள் கிரியைகள், பூஜை வழிபாடுகள் நடைப்பெற்றுள்ளன.
இதேவைளை ஆலயத்தில் தைப்பூச தினத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றதோடு, சிறார்களின் நெல்அறுவடை வசந்தன் கூத்தும் இடம்பெற்றுள்ளன.
செய்தி - ருசாத்
முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பின் உடையார்கட்டு பகுதியில் முருகன் ஆலயத்தில் தைப்பூச நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.
தைபூச திருநாளான இன்று (25.01.2024)உடையார்கட்டு முருகன் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க உபயதாரர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தின் பக்த்தர்கள் குருக்களுடன் உடையார்கட்டு குளக்கட்டு வயல் வெளிக்கு சென்று அங்கு வயலில் பூசை வழிபாடுகளுடன் புதிர் வெட்டப்பட்டு உடையார் கட்டு குளக்கட்டு பிள்ளையார் ஆலயத்தில் வைத்து பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து புதிர் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் வைத்து முருகனுக்கு சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு புதிர் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - இணுவையூர்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் உலகப் பெருமஞ்சத் திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை எம்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் திரு மஞ்சத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
இந்த காட்சியை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ்ந்தனர்.
நல்லையம்பதி அலங்கார கந்தன்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள், இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளியாக உள்வீதி, வெளிவீதியூடாக திருமஞ்சத்தில் வீற்று பக்தர்கள் அருள்பாலித்தார்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














































