தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் பிணையில் விடுதலை
தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மானை (Tamim Rahman) ஆட்ட நிர்ணயம் தொடர்பான வழக்கிலிருந்து பிணையில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்று (07.06.2024) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, 5 இலட்சம் ரூபா சொந்த பிணை கட்டணமும் 10 மில்லியன் உத்தரவாத கட்டணமும் பெறப்பட்டுள்ளது.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவு
பங்களாதேஷ் (Bangaladesh) வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜையான தமீம் ரஹ்மான், 2024இற்கான எல்.பி.எல் (LPL) வீரர்கள் ஏலத்தின் பின்னர் மே 22ஆம் திகதியன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும், ஆட்ட நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு அமைச்சகத்தில் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் தற்போது சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |