நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை! பல பகுதிகள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன.
இதேநேரம் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெற்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இன்று காலையில் காற்றுடனான கடும் மழைபெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
முட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரிகுளத்தின் வான்கதவு இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு-மண்டூர் பிரதான வீதி,பாலையடிவட்டை வெல்லாவெளி வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு அடிக்கும் மேல் வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று பொறுகாமம் ஊடாக பிரதேதேசபைக்கு இடைப்பட்ட பிரதான வீதி ஊடாக நீர் பாய்வதன் காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பயனங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேநேரம் கா.பொ.த.உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் பரீட்சைம ண்டபங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது.
இதேபோன்று தொடர்ச்சியாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கையும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
தூழ்நிலங்களில் உள்ள வயல்நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இதேநேரம் காற்றுடன் கூடிய மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வலியுறுத்தியுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும் நிலையுள்ளதனால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று தாழ்நிலப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் நிலவும் சூழ்நிலை காணப்படுவதன் காரணமாக அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு நீர்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அம்பாறை..
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர், அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் போக்குவரத்து மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.

இது தவிர சவளக்கடை கிட்டங்கி வீதி காரைதீவு மாவடிப்பள்ளி வீதிகள் மீண்டும் வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியாக அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் போக்குவரத்து பாதிப்ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







