கங்கைகளை அண்டி வாழும் இலங்கையர்களுக்கு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கங்கைகளை அண்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்பட்டுள்ள பாதிப்பு
தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
16 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 158, 391 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 20,553 குடும்பங்களைச் சேர்ந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு அடுத்த படியாக கொழும்பு மாவட்டத்தில் 10,914 குடும்பங்களைச் சேர்ந்த 40,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் களு, களனி, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் குறித்த கங்கைகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால், எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு- வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை அண்மித்த பகுதியான தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.