ஒட்டுசுட்டானில் பல இடங்களில் வெள்ளம் (Photos)
ஒட்டுசுட்டானில் பெய்து வரும் மழையினால் பல இடங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
வீதிகளுக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்தோடுவதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுவதோடு பயிர்களும் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வயல்வெளிகளின் ஊடாகவும் வெள்ள நீர் பாய்வதோடு வியாபார நிலையங்களினுள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
ஒட்டுசுட்டான் பெட்ரோல் நிரப்பு நிலையத்தினுள் ஒரு இஞ்ச் அளவுக்கு வெள்ளம் நிரம்பி இருந்ததாகவும் மழை குறையும் போது வெள்ளம் வடிவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இரவும் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் ஒட்டுசுட்டான் சந்தியில் தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளினுள் வெள்ளம் புகுந்தது கொண்டதால் இயல்பான வியாபாரம் பாதிக்கப்பட்டதோடு கடையினுள் இருந்த பொருட்களும் நீரில் நனைந்து சேதமடைந்ததாக பல வியாபாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
வெள்ள பாதிப்பு
ஒட்டுசுட்டான் - களிக்காடு வீதியில் ஒட்டுசுட்டான் சந்திக்கு அண்மையில் உள்ள அரிசி ஆலையினுள்ளும் அதனை அண்டிய வீதிகளை மேவியும் வெள்ள நீர் பாய்ந்த வண்ணம் இருக்கின்றது.
அருகில் உள்ள பாலத்தினூடாக பாயும் நீர் பாலத்தை மேவி பாய்வதை அவதானிக்கலாம்.
இன்று மாலை பெய்யத் தொடங்கிய மழையினால் குறுகிய நேரத்தில் அதிகளவான நீர் வரத்தினை ஏற்படுத்தியிருந்தது.
வயலுக்கு இன்றுதான் பசளை போட்டிருந்ததாகவும் மழை தொடர்ந்தால் பசளையிழப்பு ஏற்படுவதோடு தம் பயிர்களும் சேதமாகலாம் எனவும் விவசாயிகளிடம் பேசிய போது குறிப்பிட்டனர்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றிசுவரர் ஆலயத்தின் முன்னுள்ள வீதியையும் கோவிலுக்கு அண்மையில் உள்ள வயல்களையும் வெள்ளம் மூடிப் பாய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்படும் பொது மலசலகூடமும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் உட்பட்ட வன்னியின் பல இடங்களில் மழை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











