கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! மாணவி மரணம் : அறுவர் வைத்தியசாலையில்(Video)
புதிய இணைப்பு
வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவியும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்ட போதும் இதனை உறுதிபடுத்த முடியவில்லை.
குறித்த மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்களும் வெளிவந்துள்ளன.
பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவுவேளையின் போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் குறித்த நீர்குழாய்க்கு அருகில் கைகழுவுவதற்க்காக சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த நீர்குழாய் சுவர் நீண்ட காலமாக கவனிப்பாரற்று இருந்ததாகவும், உடைந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் சம்பவமறிந்து, பாடசாலைக்கு விரைந்த மாணவர்களின் பெற்றோர் சம்பவம் தொடர்பிலான தகவல்களை பெற முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரலவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த சிறுமிக்கு இன்று பிறந்த தினம் எனவும், அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது, அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதாகவும் உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி முதலாம் தரத்தில் கல்வி கற்பவர் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் படுகாயமடைந்த சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என எமது ஊடகவியளாளர் தெரிவித்தார்
செய்தி - டில்ஷான்