வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சி: வங்காள விரிகுடாவில் எதிர்வு கூறல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிற மழையானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை தொடரும் சாத்தியம்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் (Equatorial Indian Ocean) பிராந்தியத்தில் நேற்றைய தினம்(15) காணப்பட்ட காற்று சுழற்சியானது இன்று (16.12.2023) காலை 08.30 மணியளவில் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இலங்கையின் தெற்காக கடல் மட்டத்திலிருந்து 3.1km உயரத்தில் காணப்படுகின்றது.
இது தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவின் தெற்கு - தென்கிழக்காக, அதன் பின்னர் குமரிக்கடல் பிரதேசத்தின் தெற்கு பகுதி வழியாக எதிர்வரும்18ஆம் திகதியளவில் அரபிய கடலை பிரதேசத்தை அடையும்.
இந்த நிகழ்வின் காரணமாக இலங்கையில் பல இடங்களில் மழை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.
புதிய காற்று சுழற்சி
இதேவேளை சுமத்ரா தீவு அருகே அந்தமான் கடல் பிராந்தியத்தின் தெற்காகவும் இந்திரா முனைக்கு தெற்காகவும் இன்னுமொரு புதிய காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
இதுவும் எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதிவரையான காலப் பகுதிகளில் மழையை ஏற்படுத்தும். இந்த புதிய நிகழ்வானது இலங்கைக்கு சற்று நெருக்கமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதன் காரணத்தினால் மழையின் அளவும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்