மோசமான காலநிலை! மண்ணில் புதைந்த வாகனங்களை மீட்க முடியாமல் போராடும் மக்கள்
நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் புதைந்த வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பின்னர் மீட்பு படையினர் மீட்டிருந்தனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,
மழையின் தீவிரம்
நவம்பர் 27ஆம் திகதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழை தான் பெய்துகொண்டிருந்தது.பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது மாலையில் திடீரென சேறும் சகதியும் கலந்த மண், கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தது. வீடுகளின் முன்பாகவும், வீதியோரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ,வான்,லொறி மற்றும் முச்சக்கரவண்டி என நான்கு வாகனங்களும் வீட்டு உபயோக பொருட்களும் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன.

மேலும் 4 வீடுகள் மண் சரிவில் முழுமையாக சிக்கிக்கொண்டதுடன், சில வீடுகள் மீது பாறைகளும் விழுந்துள்ளன. இன்றுவரை அவற்றை அகற்ற முடியாத நிலையே காணப்படுகின்றது.
வாகனங்களின் மேல் பாரிய கற்பாறைகள் காணப்படுவதால் அவற்றை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தி வாகனத்தில் உள்ள சேதமான பாகங்களை மாத்திரம் மீட்டெடுக்க கூடியதாக உள்ளது.
மீண்டும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம்
மண்சரிவின் போது உடனடியாக இடம்பெயர்ந்து மக்கள் பாதினாவெல முஸ்லிம் வித்தியாலயம், ரேந்தபொல தமிழ் வித்தியாலயம், பள்ளிவாசல் மற்றும் அம்பேவல பள்ளிவாசலில் தங்க வைக்கப்பட்டனர்.

இருப்பினும், டித்வா சூறாவளியைத் தொடர்ந்து மீள்குடியேற்றுவதற்கும், வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மோசமான மழைப்பொழிவு காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டு அபாயகரமான வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் சிறிதளவு மழை பெய்தாலும், அந்தப் பகுதிகளில் மீண்டும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் சுற்றியுள்ள சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.


