தெவிநுவர இரட்டை கொலை பின்னணியில் பாதாள உலக கும்பல்
புதிய இணைப்பு
தெவிநுவர பகுதியில் நேற்று (21) இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் துபாயில் தலைமறைவாக இருக்கும் 'பாலே மல்லி' என்ற ஷெஹான் சத்சர எனும் பாதாள உலக உறுப்பினர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் 'பாலே மல்லி' என்ற குற்றவாளிக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
மாத்தறை - தெவிநுவர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்று(22.03.2025) விஜயம் மேற்கொண்ட அவர், விசாரணையையும் முன்னெடுத்துள்ளார்.
மாத்தறை - தெவிநுவர - தியூந்தர சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11.45 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
பிறந்த நாள் விழாவுக்கு சென்று பின் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மீது T-56 மற்றும் இரண்டு 9mm துப்பாக்கிகளுடன் வானில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு இளைஞர்கள்
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் நண்பரின் பிறந்தநாள் விழா தெவிநுவர வின் கபுகம்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வான் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் 39 T-56 தோட்டாக்கள்(சுடப்பட்ட) 02 உயிருள்ள தோட்டாக்கள், 02 9mm தோட்டா உறைகள்(சுடப்பட்ட தோட்டாக்கள்) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வான் எரிந்த நிலையில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, தெவிநுவரவில் உள்ள சிங்காசன வீதியில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடைய யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக ஆகிய இரண்டு இளைஞர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
