பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது
ஈழத் தமிழருக்கு “முள்ளிவாய்க்கால்“ இனப்படுகொலையின் (Genocide) குறியீடு. அதேபோல சிங்கள தேசத்தின் இளைஞர்களுக்கு “பட்டலந்த“ அரச படுகொலையின்(Democide) குறியீடாகி இன்று பெரும் பேசு பொருளாக இலங்கை அரசியலில் உருத்திரண்டுள்ளது.
ஆயினும் பட்டலந்த ஒரு பெரும் இடிமுழக்கமாக அதிர்வல்களை ஏற்படுத்தினாலும் பட்டலந்தைக்காக பெருமழை பெய்வதற்கான எந்த சாத்தியங்களும் தென்படவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அரிதினும் அரிதாகவே உள்ளது.
சிங்கள இளைஞர்களின் படுகொலை என்கின்ற பெருங் கருமேகம் சிங்கள அரசியலில் கவிழ்ந்துள்ளது. ஆயினும் அதற்கு மேலாக கட்சிகளினதும், தலைவர்களினதும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கான அரசியல் செயற்பாடு என்கின்ற பெரும் காற்று வேகமாக வீசுவதனால் இந்தக் கருமுகில்கள் சிங்கள தேசத்தில் நிகழ்ந்த மனித படுகொலைகளுக்கு நீதி என்கின்ற மழையைத் தராமல் அரசியல் அதிகார சுகம் என்னும் சூறாவளியினால் அடித்துச் செல்லப்படும் என்பதே எதார்த்தமாக உள்ளது.
பட்டலந்த விசாரணை
பட்டலந்த விசாரணைக்கு தமிழர் நாட்டு வழக்கில் ""எண்ணெய்ச் செலவு புள்ளை வளத்தியில்லை"" என்ற பழமொழிதான் பொருந்தி வருகிறது. நிகழ முடியாத பட்டலந்த விசாரணை பற்றி சற்று பார்ப்போம்.
அரசறிவியலில் அரசு என்பது மக்களை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துகின்ற நிறுவனம் என வரையறுக்கப்படும். ஆயினும் அந்த நிறுவனத்தை இயக்குவது அரசாங்கம். அந்த அரசாங்கம் மக்களை ஒடுக்கும் இயந்திரமாக உள்ள அரசை ஒட்டி செல்லும் சாரதியாகவே தொழிற்படும். அதற்கு இன்றைய இலங்கையின் என்.பி.பி அரசாங்கமும் விதிவிலக்கல்ல.
இலங்கை அரசு இறைமை என்கின்ற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்ற அடிப்படையில் அரசை இயக்கும் கருவியாகிய அரசாங்கம் விதிக்கின்ற சட்டங்களை மீறுவோரை இறைமை என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தயவு தாட்சனை இன்றி அடக்கி கொடுக்கும்.
இந்த அரசியல் அதிகார கோட்பாட்டினை அதாவது அனுமதிப்பத்திரத்தினை அரசாங்கம் கொண்டிருப்பதனால் சர்வதேச தலையீடுகளையும், மனிதவுரிமை நிறுவனங்களின் அழுத்தங்களையும் இலகுவாக கடந்து செல்லும். அந்த இறைமை என்ற அதிகாரம் அரசுக்கு காதுகாப்பளிக்கும் கேடயமாக தொழிற்படும்.
மக்களின் நியாயமான போராட்டங்கள் மீதும், மனித உரிமை குரல்கள் மீதும் இந்த இறைமை என்கின்ற மட்டற்ற அதிகாரத்தை அவ்வப்போது அரசாங்கங்கள் பிரயோகிக்கின்றன. இத்தகைய பிரயோகங்களின் உச்ச நிலையில் பெரும் மனித பேரவலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றினை இனப்படுகொலை (genocide), அரசியல் படுகொலை (politicide), அல்லது வர்க்கப் படுகொலை (classicide) அரச படுகொலை(Democide) பல்வேறு வகையா பகுத்து அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் இத்தகைய படுகொலைகள் இரண்டு வகையில் நிகழ்ந்திருக்கிறது.
சிங்கள பெரும்பான்மையினரை கொண்ட அரசாங்கங்கள் அளவால் சிறிய தமிழ்த் தேசிய இனத்தின் மீது மேற்கொள்கின்ற படுகொலைகளை genocide (இனப்படுகொலை) என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் சிங்கள தேசத்தில் சிங்கள இளைஞர்கள் இடதுசாரி அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசுக்கு எதிராக போராடியபோது சிங்கள இளைஞர்களை கொன்று குவித்ததை Democide என்றுதான் அழைக்க வேண்டும்.அதுதான் சரியானதும் கூட.
Democide என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொதுவாக அல்லது மேம்போக்காக ""அரசாங்கம் ஒன்று அதன் சொந்த குடிமக்களைக் கொன்று அழிப்பதைக் குறிக்கும்"" என பலரும் விழிக்கின்றனர். ஆகவே Democide என்ற இந்தச் சொல்லுக்கு “மக்கள்கொலை” அல்லது “அரசால் செய்யப்படும் மக்கள் படுகொலை” எனத் தமிழில் வியாக்கியானப் படுத்தலாம்.
அதாவது அரசு அல்லது அதிகாரம் செலுத்தும் அரசாங்கம் அல்லது நிர்வாக அமைப்புகள், சட்ட விரோதமான முறையில் திட்டமிட்ட வகையில் மாறுபட்ட கருத்தியலை கொண்டுள்ள தன்னுடைய மக்களைக் கொன்று அழிக்கும் செயல்பாடுகளை குறிக்கும். அமெரிக்க அரசியல் அறிஞர் R.J. Rummel என்பவர் இந்த “Democide” என்ற சொல்லை உருவாக்கி, அரசாங்கங்களால் நிகழ்த்தப்படும் கொலைகளை விவரிப்பதற்காக இதைப் பயன்படுத்தினார்.
இந்தச் சொல் இலங்கையின் ஜே.வி.பி யினர் கொல்லப்பட்டதற்கு பயன்படுத்தக்கூடிய பொருத்தமான சொல்லாக அமைகிறது. எனவே ஜே.வி.பி யினர் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலையை Democide என்று அழைப்பதே மிக சரியானது.
அந்த வகையில் பட்டலந்தையில் சிங்கள இடதுசாரி இளைஞர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும், அதன் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்துக்குள்ளானவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் படுகொலைகள் என்பவற்றை உள்ளடக்கிய Democide இக்கான நீதி விசாரணை எவ்வாறு நிகழும்? என்பதே இன்று உள்ள பெரும் கேள்வியாகும்.
நீதி விசாரணை
இப்போது பட்டலந்த Democide க்கு நீதி விசாரணை எனத் தொடங்கினால் இலங்கையில் பெரும் பூதங்கள் கிளம்பும். அதனை இன்றைய எம்.பி.பி அரசாங்கத்தால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. நடைமுறையில் பெயரளவிலாக விசாரணை, ஆணைக்குழு அறிக்கை என பலவாறு பேசலாம், கூட்டங்கள் நடாத்தலாம், அறிக்கைகள் விடலாம் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடாத்தலாம் இவை எந்தப் பயனையும் தரப்போவதில்லை.
ஆனால் இலங்கை அரசியலில் இன்று சக்தி படைத்த அல்லது இலங்கை அரசை நிர்ணயம் செய்யக்கூடிய வகையில் எழுதப்படாத யாப்பாக தொழிற்படும் பௌத்த மகாசங்கமும், அரசாங்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய பிரம்மாண்டமான இராணுவமும், அதற்கடுத்தபடியாக அரசியல் ராஜதந்திர வட்டாரங்களும், ஊடகங்களும் உள்ளன. இவற்றினை மீறி இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினாலோ, அல்லது நாடாளுமன்றத்தினாலோ எதனையும் இலங்கையில் நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதே உண்மையாகும்.
இங்கே முதற்கட்டமாக விசாரணை என்று வந்து விட்டால் குறிப்பிட்ட கொலைகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை என்பது முதலாவது தடைக்கல். அதையும் தாண்டி விசாரணையை முன்னெடுத்தால் இன்று இலங்கை பொலிஸிலும் இராணுவத்திலும் இருக்கின்ற உயர்நிலை தளபதிகள் அதிகாரிகள் என அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இலங்கை பாதுகாப்பு படை பிரிவுகளின் உயரதிகாரிகளை, வல்லமை வாய்ந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய வல்லமை இன்றைய அரசாங்கத்திற்கும் இல்லை.இலங்கையின் நீதித்துறைக்கும் கிடையாது.
இலங்கை நீதித்துறை அத்தகைய தகுதிநிலையை இழந்திருக்கின்றது என்பதற்கு நல்லதொரு உதாரணம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் பீல்மாஷல் பட்டத்தை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு ஜனாதிபதி பறித்தார். அடுத்து வந்த ஜனாதிபதி அதே நீதிமன்றத்தில் நிறுத்தி அவரை நிரபராதி என்றும், அவருக்கான பீல்மாஷல் பட்டத்தை திரும்பிக் கொடுத்தார் என்பதே போதுமான சான்று.
அதேபோல சாவகச்சேரி மிருசுவில் படுகொலைக்கு காரணமான இராணுவத்தினரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒரு ஆண்டுக்குள்ளேயே இலங்கை ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இத்தகைய அரசியல் கலாச்சாரம் உள்ள இலங்கையில் நீதித்துறையால் எத்தகைய நீதியான தீர்ப்பையும் வழங்க முடியாது. அதையும் மீறி தீர்ப்பை வழங்கினால் அந்தத் தீர்ப்பை இல்லாதொழிக்கின்ற அதிகார வரம்பை யாப்பின் மூலம் ஜனாதிபதி கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் குற்றவாளியை விடுவிக்க முடியும். நீதித்துறையின்கையாளாகாத் தன்மைக்கு அதுவும் நல்ல ஒரு உதாரணம் எம் கண்முன்னே உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பட்டலந்தை படுகொலைக்கான சாவு மணி என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைதான். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு தீர்வு ஏதும் இல்லாமல் பட்டலந்த படுகொலைக்கு நீதி விசாரணை கிடையாது என்பதே உண்மையாகும்.
இலங்கை அரசும் சரி, அரசாங்கமும் சரி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையோ, அல்லது அதற்கான தீர்வு எதனையும் கொண்டிருக்கவில்லை. அந்த நிலையில் இலங்கையில் பட்டலந்தவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி எத்தகைய ஒரு நீதி விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டுமென்ற வலுவான குரல்கள் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் எழும்.அது ஐ.நா வரை எதிரொலிக்கும்.
அநுர அரசு
ஆகவே பட்டலந்தை வதை முகாமில் சித்திரவதைக்குள்ளான, கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களுக்கு நீதி கேட்கப்போய் தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டிய நெருக்கடியில் இன்றைய அரசாங்கம் சிக்க வேண்டி வரும். தமிழர் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலைதான் (genocide), என நிரூபிக்கப்பட்டால் அதற்கு தீர்வு பிரிந்து செல்வதுதான் தீர்வாக அமையும்.
எனவே தமிழர் மீதான படுகொலைகளுக்கு விசாரணை இலங்கையில் ஒருபோதும் நடாத்த முடியாது என்றால் ஜே.வி.பி இளைஞர்கள் மீதான விசாரணையை, இவர்களுக்கான நீதியை இப்போது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை(genocide) தடுக்கப்படுகின்றது. அல்லது மறுக்கப்படுகிறது என்று சொல்வதே பொருத்தமானது.
அவ்வாறு இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்றாலும் சரி, மனித உரிமை மீறல்கள் என்றாலும் சரி, படுகொலைகளுக்கான நீதி விசாரணைகள் என்றாலும் சரி, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்றாலும் சரி ஈழத் தமிழருடைய தேசிய இனப் பிரச்சினையை தீர்க்காத வரைக்கும் இலங்கையில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது.
இன்றைய அநுரகுமார அரசும் அதன் நாடாளுமன்றமும் ஈழத் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு விசாரணை நடத்த தயார் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான மனப்பாங்கும் அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு நீதியும் இல்லை, தீர்வும் இல்லை. அதற்கான முன் முன்னெடுப்புக்கும்அவர்கள் முன்வரத் தயாரில்லை. என்னதான் நடந்தாலும் அவர்கள் ஒருபோதும் முன்வரவும் மாட்டார்கள். அவ்வாறு முன்வராதவர்கள் எப்படி பட்டலந்த படுகொலைக்கு நீதி விசாரணை நடத்த துணிவர்.
இங்கே கொடுமை என்னவெனில் கடந்தகால ஆட்சியாளர்களை பழிவாங்க புறப்பட்டு ரணில் விக்ரமசிங்கவை அப்பலப்படுத்த முனைந்த என்.பி.பி அம்மணமாக அரங்கத்திற்கு வந்துள்ளது.
தம் தோழர்கள் கொல்லப்பட்டதையும், சித்திரவதை செய்யப்பட்டதையும் கண்கண்ட சாட்சியாகவும் இருக்கும் ஜே.வி.பி யினர் தம் தோழர்களுக்காக குரல் கொடுக்க முடியாது. ""ஆப்பு இழுத்த குரங்காக"" இலங்கை அரசாங்கத்தை பொறுப்பேற்று அதிகார சுகத்தில், தலைமைத்துவ சிம்மாசனத்தில் மாட்டிக்கொண்டு விட்டனர் என்பதே உண்மையாகும்.
எனவே பட்டலந்தை விசாரணை என்கின்ற பெரும் இடிமுழக்கம் சிங்கள இனத்துக்கு நீதி என்னும் மழையை ஒருபோதும் தரப்போவதில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 23 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 1 நாள் முன்

பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு பெரும் இழப்பு: ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வற்புறுத்தல் News Lankasri

வீட்டில் பள்ளம் தோண்டும்போது தங்கம் கிடைத்ததாக கூறிய நபர்கள்: தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
