தமிழைப் படித்து வியந்து கீழடி வரை பயணம்! யாழில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த தேரரின் நெகிழ்ச்சி
தமிழைப் படித்து வியந்து ஒரு புத்தக ஆராய்ச்சிக்காக இந்தியாவிலுள்ள கீழடி வரை சென்றேன் என்று யாழ்.பல்கலைகழகத்தில் தமிழில் பட்டம் பெற்ற இந்திரானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்(Jaffna University) தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று தேரர் ஒருவர் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழில் பட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த மதகுரு, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்த ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கிய அவர்,
“தமிழ் படிக்க ஆசைதான் வந்தது. அதற்கு பல ஆசிரியர்களும் உதவி கூறினார்கள். தேரர்கள் சின்னவயதிலிருந்து மனப்பாடம் செய்ய வேண்டும், எனவே அது தமிழ் படிக்க மிகவும் உதவியது.
தமிழ் என்றால் யாழ்
தமிழ் மொழி ஒரு கடல் போன்றது, இன்னும் பல நூல்களை நான் கற்க வேண்டும். இந்து சமயம் படிப்பதற்கு தமிழ்மொழி படிக்க வேண்டும், அன்னும் தமிழ் மொழியில் பல பட்டங்களை பெற வேண்மென்ற ஆசையும் உள்ளது.
யாழ்.பல்கலைகழகத்தில் பட்டம் பெற வேண்டுமென்பது கனவுதான் அது இப்போது நடைபெற்றுள்ளது. எனக்கு எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை, நாங்கள் 12 மணிக்கு முன்னர் உணவு அருந்த வேண்டும், அதற்குமே எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ் என்றால் யாழ்- யாழ் என்றால் தமிழ் எனவே அவ்வாறானவொரு இடத்தில் பட்டம் பெற்றது மிகவும் சந்தோசமாகவுள்ளது.
நிறைய தேரர்களும் தமிழ் படிக்கிறார்கள், தமிழ் தெரிந்த சிங்கள ஆசிரியர்கள் இல்லாதது தான் இங்கு பிரச்சினையாக உள்ளது.
நான் திருக்குறள், மணிமேகலை, மதுரைகாஞ்சி ஆகிய நூல்களை கற்றுள்ளேன். தம்மபதத்திற்கு எவ்வாறான மரியாதை மனதில் உள்ளதோ, அதே மரியாதை திருக்குறள் மீதும் உள்ளது.
தமிழ் மொழியின் சிறப்புகள்
இவைகளை ஆராய்ச்சி செய்யும் பொழுது மிகவும் ஆச்சரியமும், மரியாதையும் கலாசாரத்தை தெரிந்துக்கொள்ளகூடியதாக இருந்தது.
நான் என்னுடைய பகுதியில் தமிழ் மக்களுக்கான அறநெறி பாடசாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளேன்.
முன்பு என்னுடைய விகாரையில் சிங்கள மொழியில் மட்டுமே பெயர்பலகை இருந்தது. தற்போது தமிழிலும் பெயர் பலகை உள்ளது.
சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்கவேண்டும், தமிழ் புத்தகங்களை சிங்கள் மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும், அப்போதுதான் தமிழ் மொழியின் சிறப்புகள் அவர்களுக்கும் தெரியவரும்” என குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
