பிறந்த சிசுவை வீசிச்சென்ற தாயிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
குருணாகலில் வயல் பரப்பில் சிசுவை விட்டு சென்ற தாயை, அதனை பொறுப்பெடுத்தால், வாழ்வாதாரத்திற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர பகுதியில் உள்ள ஒரு வயலில் விடப்பட்ட குழந்தை தொடர்பில் அமைச்சர் நேற்று ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்டார்.
கைவிட்டுச் சென்ற சிசுவின் தாயைக் கண்டுபிடிக்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சிசு மீட்பு
அந்த பகுதியில் வசிக்கும் ஒருவரின் தகவலின் அடிப்படையில், மாவதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் குழந்தையை கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த சிசு மாவதகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
குருணாகல் குழந்தைகள் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன் குழந்தை சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.



