மாத்தறை வைத்தியசாலையில் சிசுக்களின் சடலங்கள் பெருமளவில் காணப்படுவதாக தகவல்
மாத்தறை வைத்தியசாலையில் பெரும் எண்ணிக்கையிலான சிசுக்களின் சடலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக எடுத்துச் செல்லப்படாத சிசுக்களின் சடலங்கள் மற்றும் உடல் பாகங்களே இவ்வாறு குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருக்கலைப்பு செய்த சந்தர்ப்பங்கள், இறந்தே பிறந்த சிசுக்கள், சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உடல் பாகங்கள் உள்ளிட்டன இவ்வாறு பிணவறையில் பேணப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு நீண்ட நாட்களாக சிசுக்களின் சடலங்கள் மற்றும் உடல் பாகங்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ளதனால் ஏனைய சடலங்களை வைக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
பிணவறையின் குளிரூட்டிகள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலங்கள் இவ்வாறு குவிந்து கிடக்கும் பிணவறைக்கு அருகாமையில் கர்ப்பிணி தாய்மார் சிகிச்சை பெறும் விடுதி காணப்படுவதாகவும், இது தாய்மாருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், சடலங்கள் குவிந்து கிடப்பது பற்றி தமக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மல்காந்தி மெதிவக்க தெரிவித்துள்ளார்.