அசாத் சாலியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
இலங்கையின் சட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் (Asad Sali) விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, அசாத் சாலியின் சட்டத்தரணி, ஒரு காணியை விற்பதற்கான ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு தனது கைதிக்கு அனுமதி வழங்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு அனுமதியளித்த நீதிவான், சிறைச்சாலையில் இருக்கும் போது பிரதிவாதி உரிய ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் (NUF) தலைவரான அசாத் சாலி, இந்த குற்றத்துக்காக நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வருடம் மார்ச் மாதம் 16 அன்று, அசாத் சாலி குற்றப்புலனாய்வுத் துறையினரால்
கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்பு (PTA) விதிகளின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
