ரணில் ஒரு பொருளாதார அடியாள்! ஐங்கரநேசன் காட்டம்
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் தாழ்பணியும் ஒரு சேவகராகவும் பொருளாதார அடியாளாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் இடம்பெற்ற பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
"இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, 2019ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 966 ரூபாவாக இருந்த தனி நபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்கான மாதாந்தச் செலவு இப்போது 17 ஆயிரத்து 14 ரூபாவாக உயர்ந்துள்ளது.
வருமான வீழ்ச்சி
உலக வங்கி தன்னுடைய அறிக்கையில் இலங்கையில் அறுபது வீதமான குடும்பங்களின் வருமானம், வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வாங்கும் திறன் குறைந்ததால் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச் சத்துக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு என்பவற்றை மக்கள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.
இவை, பொருளாதார மறுசீரமைப்பு என்ற பெயரில் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் கட்டளைகளை சிரமேற்கொண்டு அரசு நடைமுறைப்படுத்துகின்ற வரி விதிப்பு முறைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எல்லாம் சேர்ந்து சமூகத்தின் மீது தொடுத்திருக்கும் தாக்குதலின் விளைவுகள் ஆகும்.
நாளுக்கு நாள் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.
ஆனால், அமெரிக்கப் பேரரசு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார நடவடிக்கைகளை அவ்வப்போது வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றது.
வல்லாதிக்க சக்திகள்
இதன் பொருள் ரணில், நிறுவனங்களுக்கும் பெரும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் சிறந்த சேவகராக, ஒரு பொருளாதார அடியாளாக இருக்கின்றார் என்பதுதான்.
ரணில் விக்ரமசிங்கவை அடிக்கடி வெளிப்படையாகப் பாராட்டுவதன் மூலம் அவரை ஒரு பொருளாதார மீட்பராக மக்கள் மத்தியில் கட்டமைக்க அமெரிக்கா விரும்புகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த விம்பம் அவரை வெல்ல வைக்கும் என்றும் அமெரிக்கா நினைக்கின்றது.
இலங்கையின் ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்பதை வல்லாதிக்க சக்திகளே தீர்மானிக்கின்றன.
அதற்கேற்ப மக்களை, வாக்காளர்களை, மக்கள் பிரதிநிதிகளை மூளைச்சலவை செய்யும் வேலைகள் கனகச்சிதமாக இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எமது மக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |