உஸ்மான் கவாஜாவிற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எச்சரிக்கை
பாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட்போட்டியின் போது அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜா காசா மக்களிற்கு ஆதரவாக எந்த செய்தியையும் மைதானத்தில் வெளியிடக்கூடாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எச்சரித்துள்ளது.
கவாஜா அனைத்து உயிர்களும் முக்கியம் சுதந்திரம் என்பது மனித உரிமை போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட காலணிகளை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும் மைதானத்தில் தனிப்பட்ட செய்திகளை வெளியிடுவதில்லை என்ற சர்வதேச விதிமுறைகளை கவாஜா பின்பற்றவேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உஸ்மன் கவாஜாவிற்கு ஆதரவு
அவுஸ்திரேலிய அணித்தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் உஸ்மன் கவாஜாவிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடும் முதலாவது முஸ்லீமான கவாஜா பாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டவேளை குறிப்பிட்ட வாசகங்கள் அடங்கிய காலணியுடன் காணப்பட்டார்.
காசா பொதுமக்களிற்காக அவர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் குரல்கொடுத்திருந்தார். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து மக்கள் கரிசனை கொள்ளவில்லையா அல்லது அவர்களின் தோலின் நிறம்தான் அவர்களை முக்கியத்துவம் அற்றவர்களாக மாற்றுகின்றதா? அல்லது அவர்கள் பின்பற்றும் மதமா? என சமூக ஊடக பதிவொன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் அனைவரும் சமம் என உண்மையாகவே நாங்கள் கருதினால் தோலின் நிறமும் மதமும் முக்கியமற்றவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஐசிசியின் விதிமுறை
இதேவேளை கவாஜா குறித்த தகவல் வெளியான பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை
“நாங்கள் எங்கள் வீரர்களிற்கு தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதற்கு உள்ள உரிமையை ஆதரவளிக்கின்றோம்.
தனிப்பட்ட செய்திகளை தடை செய்யும் ஐசிசியின் விதிமுறை உள்ளது. அதனை நாங்கள் மதிக்கின்றோம்” என தெரிவித்துள்ளது.
இதேவேளை கவாஜா தனது திட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளார் என அணித்தலைவர் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
“அதனை பெரிய விடயமாக்குவது அவரின் நோக்கம் இல்லை. அனைத்து உயிர்களும் முக்கியமானவை என்ற வாசகங்களை அவர் தனது காலணியில் எழுதியிருந்தது ஒரு பிரிவினை விடயமல்ல.
எவரும் இதற்கு எதிராக முறையிடலாம் என நான் கருதவில்லை” என பட்கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |