இலங்கையர்கள் உள்ளிட்டோரை நாட்டின் குடிமக்களாக அங்கீகரித்த அவுஸ்திரேலிய பிரதமர்
அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் (Australia) புதிய குடிமக்களை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) இன்று (26) அங்கீகரித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, புதிய அவுஸ்திரேலியர்களுக்கு முறையாக குடியுரிமை வழங்கவும் இன்று பல்வேறு இடங்களிலும் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் முக்கிய நிகழ்வு ஒன்று, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையில் கென்பெராவில் நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை
இதன்போது, இலங்கை, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் குடியமர்ந்த 24 புதிய குடிமக்களை அவர் வரவேற்றார்.'
இன்றைய முதலாவது அவுஸ்திரேலிய தினத்தை, ஒரு அவுஸ்திரேலியராக நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
76 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இதேபோன்ற முதல் நிகழ்வில் குடியுரிமை பெற்ற ஏழு பேரும், அதைத்தொடர்ந்து வந்த 6 மில்லியனுக்கும் அதிகமானோரும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமையை பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு, விருப்பம் மற்றும் உறுதியால் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தில் நாம் அனைவரும் ஒரு பகுதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவை “பூமியின் மிகப்பெரிய நாடு” என்று பிரதமர் அழைத்தார், மேலும் எதிர்காலத்தில் அதை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அவுஸ்திரேலியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |