பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம் இல்லை: அவுஸ்திரேலியா
பாலஸ்தீன (Palestine) தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் கூறியுள்ளது.
பாலஸ்தீன தேச அங்கீகாரம்
நோர்வே (Norway), அயர்லாந்து (Ireland) மற்றும் ஸ்பெயின் (Spain) போன்ற நாடுகளை பின்பற்றி அவுஸ்திரேலியா பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என கிறீன்ஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா இரண்டு தேச கொள்கைக்கு நீண்டகாலமாக ஆதரவு அளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் (Penny Wong) இந்த செயற்பாடு மிக அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, “பாலஸ்தீனியர்களிற்கு மேலதிக உரிமைகளை வழங்கும் இரண்டு தேச கொள்கையை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்களித்திருந்தது.
எனினும், இதன் அர்த்தம் அவுஸ்திரேலியா ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது என்பதல்ல” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |