பிரித்தானியரொருவரின் விசாவை ரத்து செய்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட நாசி (Nazi) சின்னத்தைப் பகிரங்கமாகப் பயன்படுத்திய மற்றும் யூத சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜை ஒருவரின் விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டில் நிலவும் யூத எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
பிரித்தானியரின் விசா
43 வயதான குறித்த நபர், 'எக்ஸ்' (X) தளத்தில் நாசி சித்தாந்தங்களைப் பரப்பியதுடன், யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke), "விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் இங்கு விருந்தினர்களாகவே கருதப்படுவார்கள்; வெறுப்பைப் பரப்புவதற்காக வருபவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
போண்டி கடற்கரையில் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது தந்தை மற்றும் மகனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள நிலையில், வெறுப்புணர்வைத் தூண்டுபவர்களுக்கு எதிராக விசா ரத்து செய்யும் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தப் போவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குடிவரவுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த பிரித்தானியர், விரைவில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.