பரீட்சைத் திணைக்களத்தினால் அழிக்கப்பட்ட 1,35,000 புத்தகங்கள்
பரீட்சைத் திணைக்களத்தினால் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக அச்சிட்ட மடக்கைப் புத்தகங்களில் தவறான எண்கள் சேர்க்கப்பட்டிருந்ததன் காரணமாக ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (1,35,000) புத்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி அந்தப் புத்தகங்கள் 1997, 1998, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்டுள்ள தவறான எண்கள்
புத்தகங்களில் தவறான எண்கள் சேர்க்கப்பட்டிருப்பது 2024 உயர்தரப் பரீட்சையின் போதே உறுதி செய்யப்பட்டதாகக் கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் மடக்கைப் புத்தகங்கள் கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் பரீட்சைத் திணைக்களத்தால் கொள்முதல் செய்யப்பட்டிருந்த வயர் ஸ்டிச்சிங் (Wire stitching) இயந்திரத்தை இயக்கும் போது காகிதங்கள் கிழிந்ததால் அந்த இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்ட நாளிலிருந்தே பயன்படுத்தப்படாமல் செயலிழந்துள்ளதாகவும் இயந்திரத்தின் பெறுமதி கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகளும் திணைக்களத்தில் இல்லை.

இதற்கிடையில் திணைக்களத்தின் அச்சு இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் 427 டோனர் கார்ட்ரிஜ்கள் (Toner Cartridge - 2011 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையிலுள்ளவை) காலாவதியான இருப்புகளாகக் காணப்பட்டதாகத் கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.
இந்தத் தகவல்கள் பரீட்சைத் திணைக்களத்தின் 2025 வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.