அவசர மற்றும் அனர்த்த காலங்களில் ஒலிவடிவ எச்சரிக்கை பொறிமுறை
அவசர மற்றும் அனர்த்த காலங்களில் பொதுமக்களை எச்சரிக்கை செய்வதற்கான ஒலிவடிவ (Audio Alert) பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
ஒரு இயற்கை பேரிடர் அல்லது விபத்து ஏற்படுவதற்கு முன்பு, இலங்கை முழுவதும் உள்ள மக்களின் கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒலிவடிவ எச்சரிக்கையை அனுப்பும் ஒரு புதிய அவசர எச்சரிக்கை அமைப்பாக குறித்த பொறிமுறை செயற்படும்.
இந்தியா உட்பட பல நாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொறிமுறையின் அடிப்படையில், இலங்கைக்கு ஏற்றவாறு இந்த அமைப்பு ஆராயப்பட்டு வருவதாக ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
எச்சரிக்கை நடவடிக்கை
இதன் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் அமைந்துள்ள கைபேசி சேவை கோபுரங்கள், அப்பகுதியில் இயங்கும் அனைத்து கைபேசிகளுக்கும் இந்த எச்சரிக்கைகளைத் தானாகவே அனுப்பும் அமைப்பைக் கொண்டிருக்கும்.

இந்தச் செய்தியுடன் கைபேசிகளிலிருந்து ஒரு உயர் அதிர்வெண் ஒலி அலையும் வெளியிடப்படவுள்ளது. இது, கைபேசி பயனர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது கூட அவர்களை எழுப்பி எச்சரிக்கம் வகையில் அமைந்திருக்கும்.
இந்த அமைப்பை இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும், எழக்கூடிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நாட்டின் பேரிடர் முகாமைத்துவ மையத்திற்கு பல வெளிநாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் இறுதிப் பணிகள் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் குறுகிய காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக கடந்த பத்தாண்டுகளாக முறையான பராமரிப்பின்றி கைவிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை கோபுரங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் நாட்டைத் தாக்கிய 'டித்வா' புயலின் போது பேரிடர் முகாமைத்துவ மற்றும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர்இ அரசாங்கம் இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது.