கிளிநொச்சி விவசாயிகளால் முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டமானது இன்று(07) காலை 9.30 மணயளவில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நீர்பாசன திணைக்களம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.
இதன்போது சிறுபோக செய்கைக்கு கடந்த காலங்களை போன்றல்லாது இம்முறை நீர் வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டமையை கண்டித்தும், சிறுபோக செய்கைக்கான நீரை முழுமையாக வழங்குமாறு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விவசாயிகளால் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த மகஜரில் இரணைமடு குளத்தில் 34 அடி 8 அங்குலம் நீர் இருக்கும் நிலையில் 15750 ஏக்கரில் சிறுபோக செய்கை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தும், 6 ஏக்கர் தொடக்கம் 25 ஏக்கர் வரை காணிகள் உடைய விவசாயிகளிற்கு 4 ஏக்கர் செய்கை வழங்கப்படும் எனவும் தீர்மானித்துள்ளமை வாழ்வாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு 10 ஏக்கர் காணி உள்ளவர்களிற்கு 5 ஏக்கர் செய்கை மேற்கொள்ளவும், 15 ஏக்கர் வரை காணி உள்ளவர்களிற்கு 6 ஏக்கர் செய்கை மேற்கொள்ளவும், 20 ஏக்கர் நிலம் உள்ளவர்களிற்கு 8 ஏக்கர் செய்கை மேற்கொள்ளவும், 25 ஏக்கரிற்கு மேற்பட்ட காணி உள்ளவர்களிற்கு 50 வீதம் எனவும் நீர்பாசனம் வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த காலங்களைப்போன்று தமக்கு நீர்பாசனம் வழங்கும் படியாக தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியதுடன், விவசாயிகளால் வழங்கப்பட்ட மகஜரையும் அரசாங்க அதிபர் பெற்றுக்கொண்டார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறிப்பிடுகையில், இவ்விடயம் சிறுபோக செய்கை தொடர்பான முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்விடயம் தொடர்பில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனவும், அதில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித எதிர்ப்புகளும் காணப்படவில்லை
எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.












பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
