மட்டக்களப்பில் கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்க முயற்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் முயற்சிப்பதாக கிழக்கு மாகாண கடற்றொழில் சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு, இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு ,கிழக்கு கடற்றொழில் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்தின பல மில்லியன் ரூபா செலவில் கல்லாறு, காத்தான்குடி, பாலமீன்மடு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக ஒரு மண்ணெண்ணைய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்து அந்த பகுதி கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்தார்.
பாரிய போராட்டம்
இவ்வாறு அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மட்டும் இயங்கி கொண்டிருக்கின்றதுடன் கல்லாறு, காத்தான்குடி ஆகிய இரண்டும் இயங்காமல் பழுதடைந்து துருப்பிடித்து கிடக்கிறது.

இந்தநிலையில், கடற்றொழில் சங்கத்துக்கு வருவாயாக வரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறித்து கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலை செய்துவரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மத்திய அரசில் இருந்து வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்கள் கையில் இருந்து பறிபோகுமாக இருந்தால் நாங்கள் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல வடக்கு மாகாண கடற்றொழில் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.