முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை கொலை செய்யும் திட்டம்! நால்வர் மீது குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நால்வர் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மகிந்தவை கொலை செய்யும் முயற்சி
2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குண்டுத் தாக்குதல் மூலம் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குற்றபத்திரங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றமற்றவர் என விடுதலை
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டபுள்ளே கொலை தொடர்பில் லக்ஷ்மன் குரேவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்படி, 14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் கம்பஹா மேல்நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவித்து விடுவிக்கப்பட்டார்.
லக்ஷ்மன் குரேவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தவறிய நிலையிலே அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.